வெட்டுக் கிளிகள்

வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு:-

கொரோனா தொற்று ஏற்கெனவே பெரும் உயிரிழப்புகளையும் பொருளாதார இழப்புகளையும் தொடர்ந்து ஏற்படுத்திவரும் நிலையில் locust swarm எனப்படும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களின் விளைநிலங்களில் பெரும் அழிவை ஏற்படுத்திவருவது அதிர்ச்சியளிக்கிறது.

வெட்டுக்கிளிகளின் வாழ்வுமுறை

இப்போது விளைநிலங்களை ஆக்கிரமித்திருக்கும் வெட்டுக்கிளிகள் நாம் சாதாரணமாக நம் பகுதிகளில் காணும் வெட்டுக்கிளிகளுக்கு நெருங்கிய உறவினர்கள். ஆப்பிரிக்கா மற்றும் அரேபிய நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்ட இந்த வெட்டுக்கிளிகளின் வாழ்வுமுறை மிகவும் விசித்திரமானது.

பொதுவாகத் தனித்தனியாகக் (Solitary Phase) குறைந்த எண்ணிக்கையில் ஆங்காங்கு நிலத்தில் காணப்படும் இந்த வெட்டுக்கிளிகள் எப்போதும் ஆபத்தானவை அல்ல. வறட்சி ஏற்படும் காலகட்டங்களில் ஆங்காங்கே உதிரிகளாய் இருக்கும் இவை பசுமையான சிறிய நிலப்பரப்புகளுக்கு வந்து சேர்கின்றன. அவ்வாறு பல வெட்டுக்கிளிகள் ஒரே இடத்தில் நெருங்கி உணவுதேட நேரும்போது அவற்றின் நரம்புமண்டலம் தூண்டப்பட்டு செரட்டோனின் (serotonin) என்னும் வேதிப்பொருள் அதிக அளவில் அதன் உடலில் உற்பத்தி செய்யப்படுகிறது. அப்போதுதான் அவை ஆபத்தான அச்சுறுத்தும் உயிரினங்களாக மாற்றம் பெறுகின்றன.

வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தும் படிநிலை

இந்த செரட்டோனின் உடலில் சுரந்த சில மணி நேரங்களில் அவற்றின் குணநலங்களில் பெரும் மாறுதல் ஏற்படுத்துகிறது. தனித்து வாழும் வெட்டுக்கிளிகள் அப்போதுதான் சமூகமாய் ஓத்துழைத்து வாழும் கூட்டு வாழ்வுக்குத் (Gregarious phase) தூண்டப்படுகின்றன. அவற்றின் உணவு உண்ணும் பழக்கம், நடத்தை, வேகம் என அத்தனையும் மாற்றமடைகின்றன. இந்நிலையில் சரியான ஈரப்பதமும் ஈரமண்ணும் வாய்க்கப்பெற்றால் அவற்றின் முட்டைகளிலிருந்து வெளிவரும் அடுத்த தலைமுறை வெட்டுக்கிளிகள் உருவ அமைப்பிலும் நிறத்திலும் ஏன் மூளை அளவிலும்கூட மாறுதல் பெறுகின்றன. இந்த மாற்றங்கள் முட்டைகள் பொரித்தபின் அவற்றின் வளரிளம் பருவத்தில் (Nymph) நடைபெறுகின்றது. பெற்றோரிடமிருந்து முற்றிலும் தோற்றத்திலும் நடத்தையிலும் வேறுபட்ட இந்தத் தலைமுறை பெரிய மூளை, குட்டையான கால்களுடன் அதிக தூரம் பயணிக்கும் தகவமைப்பைப் பெறுவதோடு பெரும் அழிவு சக்தியாக உருவெடுக்கின்றது.

பலநூறு முட்டைகளையிடும் ஒரு வெட்டுக்கிளி தன் வாழ்நாளில் மூன்று முறைகள் வரை முட்டையிடுகிறது. இவை இலைகளில் மட்டுமின்றி மண்ணிற்கு அடியிலும் முட்டையிடுகின்றன. பெரும் கூட்டமாக மிகக்குறைந்த கால அவகாசத்தில் மிகப்பெரும் எண்ணிக்கையில் பெருகும் இந்த வெட்டுக்கிளிகள் தம் கண்ணில் படும் பசுமை அத்தனையையும் அழித்து உண்டபடி பெரும்பசியுடன் கூட்டமாய் அடுத்தடுத்த பசுமை நிலங்களை நோக்கி நகர்கின்றன. இவற்றின் கண்ணில்படும் எந்தத் தாவரமும் தப்ப முடியாது. இவை ஒரு நாளைக்கு நூறு கிலோமீட்டர்களுக்கும் மேல்கூட பயணிக்க வல்லவை. தொடர்ந்து பசுமையை நோக்கி பயணித்துக்கொண்டே இருக்கும் இவை செங்கடலையே தரையிறங்காது தாண்டக்கூடியவை. சில ஆண்டுகள்கூட தொடர்ந்து அழிவுகளை ஏற்படுத்திக்கொண்டே தொடர்ந்து நகர்ந்துகொண்டே இருக்கும் திறன் கொண்டவை. பாலைவன லோகஸ்ட் என்ற வெட்டுக்கிளி இரண்டரை மாதங்கள் முதல் ஐந்து மாதங்கள்வரை வாழக்கூடியது.

ஆச்சரியகரமாக ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப்பின் அவை தாமாகவே தமது முந்தைய solitary phase ஐ அடைந்து மீண்டும் ஆபத்தற்ற ஒன்றாக மாறிவிடுகின்றன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெட்டுக்கிளி இனங்களில் வெறும் 22 இனங்களே இந்த Locust swarm எனப்படும் அழிவு சக்தியாக மாற்றம் பெறும் திறனுள்ளவை.

உலகின் மொத்த நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதியை அழித்து பத்தில் ஒரு பங்கு உலக மக்கட்தொகையை பட்டினிக்குத் தள்ளும் அளவுக்கு அவை திறன்பெற்றவை என்று National Geographic இவற்றைப்பற்றி பெரும் கவலைதரும் தகவலைப் பதிவு செய்கிறது.

இந்த ஆபத்தை உலகம் எப்படிக் கையாளுகிறது?

அடுத்ததாக இந்த ஆபத்தை எப்படி உலகம் எதிர்கொள்கிறது என்று பார்க்கும்போது ஏறக்குறைய கொரோனா போன்ற கையறு நிலையே காணப்படுகிறது. இந்த வெட்டுக்கிளிகளின் விரைவான இனப்பெருக்கம், தொடர்ந்த வலசை (migration), பெரும் பரவல் மற்றும் எண்ணிக்கையால் இவற்றைக் கட்டுப்படுத்துவது பெரும் சவாலான ஒன்றாக இருக்கிறது. தற்போதைய சூழலில் வானிலிருந்து தெளிக்கப்படும் வேதிப் பூச்சிக்கொல்லிகளே உலகம் முழுதும் இதற்கு தீர்வாகக் கருதப்படுகிறது. இந்திய அரசும் மாலத்தியான் எனப்படும் பூச்சிகளின் நரம்பு மண்டலத்தைத் (!) தாக்கி அழிக்கும் நச்சை இந்த வெட்டுக்கிளிகளுக்கு எதிராகப் பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளது. இது அதிகம் நீர்க்கப்பட்டுதான் (Ultra Low Volume) பயன்படுத்தப்படவேண்டும் என்றாலும் இதன் நச்சுத்தன்மை விவசாயத்துக்கு நன்மை செய்யும் பூச்சிகளையும் சேர்த்தே அழிக்கும் என்பதோடு அதன் நச்சு எச்சம் நீரிலும் நிலத்திலும் கலக்கும் என்பது மறுக்கமுடியாது உண்மை.

இந்த வெட்டுக்கிளிகள் விரைவில் தொடர்ந்து இடப்பெயற்சி அடைந்து விடுவதாலும் பல சதுரகிலோமீட்டர் தொலைவுகளுக்கு இலட்சக்கணக்கான எண்ணிக்கையில் காணப்படுவதாலும் இந்த பூச்சிக்கொல்லித் தெளிப்பு பெரிய அளவில் பயனளிப்பதில்லை. இந்நேரத்தில் இயற்கையிலேயே பூச்சிகளை கட்டுப்படுத்தும் பறவைகள் மற்றும் விலங்குகளை நாம் பெருமளவில் ஒழித்துவிட்டதையும் வருத்தத்துடன் நினைவுகூர வேண்டியிருக்கிறது.

விழிப்புடன் இருக்கிறதா தமிழகம்?

ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்டு அரேபியாவைக் கடந்து ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என்று பயணிக்கும் இந்த வெட்டுக்கிளிகள் சாதாரணமாக தம் வலசையை இராஜஸ்தானின் மேற்கு எல்லையோடு முடித்துவிடுவது வழக்கம். ஆனால் 27 ஆண்டுகளுக்குப்பிறகு இவை இந்தியாவின் பெரும் நிலப்பரப்பை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருப்பதை நாம் நம்முடைய உணவுப் பாதுகாப்பின் மீதான பெரும் அச்சுறுத்தலாகவே பார்க்கவேண்டியிருக்கிறது. இவை தமிழகத்துக்கு வராது என்று அரசு கூறினாலும் இவற்றின் இடப்பெயற்சியை சரியாக யாராலும் கணிக்கமுடியாது என்பதே அறிவியல் உண்மை. இவை தமிழகத்துக்கு வராது என்று உறுதியாகச் சொல்லிவிட முடியாது என்று பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் சொல்வதைக் கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது. மேலும் இதுகுறித்த பேட்டி ஒன்றில் பேராசிரியர் அவர்கள் தமிழக அரசும் விவசாயிகளும் தகுந்த முன்னேற்பாடுகளுடன் இருக்கவேண்டும் என்று குறிப்பிடுவதோடு வேதிப் பூச்சிக்கொல்லிக்கு மாற்றாகச் சில பாதுகாப்பான மாற்றுகளையும் முன்வைக்கிறார்.

கொரோனா விஷயத்தில் முதலில் அரசு மெத்தனமாக இருந்துகொண்டு பின்னர் கைவிரித்தது போன்றில்லாது இப்போதே நம்மிடமிருக்கும் மக்களையும் மண்ணையும் நேசிக்கும் நிபுணர்களிடம் கலந்தாலோசித்து உரிய தயாரிப்புடன் இருப்பதே விவேகமானது. ஆபத்து நெருங்க வாய்ப்புகள் இருக்கும் நேரத்தில் எவ்வித தாமதமும் இன்றி சில சோதனை முயற்சிகளைச் செய்து முடித்துவிடுவதே விவேகமானது.

தொடரும் அச்சுறுத்தல்களும் காலநிலை மாற்றமும்

வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இவ்வுலகத்துக்குப் புதியதல்ல. இஸ்ரயேலர்களிடமிருந்த எகிப்தியர்களைக் காக்க எகிப்தியர்களின் நிலத்தின்மீது கடவுள் வெட்டுக்கிளிகளை ஏவியதான குறிப்புகள் பைபிளில் காணக்கிடக்கின்றன. அக்காலத்திலேயே வெட்டுக்கிளிகள் ஒரு அச்சுறுத்தும் சக்தியாகவே இருந்திருக்கின்றன. எனினும் இன்றைய அதிகரிக்கும் புவி வெப்பமும் காலநிலை மாற்றமும் இந்த அழிவு சக்திக்கு இன்னும் அதிக சாதகமாக இருப்பதை அறிவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஆபத்தற்ற solitary phase இல் வாழும் வெட்டுக்கிளிகளை ஆபத்தான Gregarious phase க்கு மாற்றுவது அவற்றின் சுற்றுச்சூழலும் காலநிலையுமே. அதிகரிக்கும் கடல்களின் வெப்பநிலை அதிக ஈரப்பதத்தையும் அபூர்வமான புயல்களையும் கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் அரேபிய தீபகற்பத்தில் ஏற்படுத்தி இந்த வெட்டுக்கிளிகளின் Gregarious phase க்கு மேலும் மேலும் தூண்டக்கூடும் என்று எச்சரிக்கின்றனர்.

கொரோனா உட்பட உலகெங்கும் நடக்கும் விசித்திரமான தொடர் நிகழ்வுகள் நமக்குச் சுட்டிக்காட்டுவது ஒன்றே ஒன்றுதான். காலநிலை மாற்றம். உலக வெப்பமயமாதலின் விளைவுகளை நம் தலைமுறை ஏற்கெனவே சந்திக்கத் தொடங்கிவிட்டது. உலக வெப்பமயமாதல் பூச்சிகளின் பெருக்கத்திலும் நடத்தியிலும் விரும்பத்தகாத மாற்றங்களை ஏற்படுத்தும் என்று அறிவியலாளர்கள் ஏற்கனெவே எச்சரித்திருக்கின்றார்கள்.

வரலாறு காணாத மழை, வரலாறு காணாத வெள்ளம், வரலாறு காணாத வெப்பம், வரலாறு காணாத வறட்சி, என புதிய புதிய மொழியில் இந்த பூமி மனிதனிடம் ஏதேதோ பேச முயல்கிறது. ஆனால் இதை போன்ற கடுமையான சோதனைகளை உலகம் இதற்கு முன்பே சந்தித்து இருக்கின்றது.

சரி அதற்கான ஆதாரங்களை மதங்களை கடந்து பார்ப்போம்.

படையெடுக்கும் வெட்டுக்கிளியால்
பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் கடுமையான பாதிப்புகள்..
உ.பி வரை வந்துவிட்டது என்று செய்திகள் சொல்கிறது.

வெட்டுக்கிளி படையெடுப்பும் இறை வேதமும் …

அல்லாஹ் தன் வேதத்தில் கூறுகின்றான்…

ஆகவே அவர்கள் மீது, கனமழையையும், வெட்டுக்கிளியையும், பேனையும், தவளைகளையும், இரத்தத்தையும் தெளிவான அத்தாட்சிகளாக (ஒன்றன்பின் ஒன்றாக) அனுப்பி வைத்தோம் – ஆனால் அவர்கள் பெருமையடித்து குற்றம் புரியும் சமூகத்தாராகவே ஆகியிருந்தனர்.
(அல்குர்ஆன் : 7:133)

வெட்டுக்கிளியின் அசுர வேகத்தில் பல ஏக்கர் விவசாயத்தை அழித்துவிடுமாம்.

குறிப்பாக அமெரிக்கா நாடுகளில் காணப்படும் சில வகை வெட்டுக்கிளி இனங்கள், தொடர்ந்து 13 வருடங்கள் மண்ணில் புதையுண்டு மரண நிலையில் வாழ்ந்து வரும். இதில் வேறு ஒரு இன வெட்டுக்கிளிகள். 17 வருடங்கள் மண்ணுக்குள்ளேயே முட்டையுடன் அடங்கிக் கிடக்கும். சரியாக 13 வருடங்கள் முடிந்து பதினாலாம் வருடத்தில்…அல்லது 17 வருடம் முடிந்து பதினெட்டாவது வருடத்தில்தான் மண்ணுக்கு மேல் வெளி வந்து பறந்து திரியும். இந்த வெட்டுக்கிளி இனத்திற்குப் பெயர். ( Periodical cicadas.Magiccicada is the genus of the 13 years and 17 year )

பதினேழு வருடங்கள் மண்ணுக்குள் மரண நிலையில் இருந்த இந்தவெட்டுக்கிளிகள் கடைசியாக 2007 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தென்பட்டது. இனி அதன் மரண மயக்கம் தெளிந்து விழித்து எழுவது 2024 ஆம் வருடமே! அல்லாஹ்வின் படைப்பில் பல ஆச்சரியங்கள் உண்டு.இறந்த மனிதன் இறுதி நாளில் மீண்டும் உயிர் பெற்றெழுவது இறை மறுப்பாளர்களுக்கு நம்ப முடியாத செய்தியாக உள்ளது. ஆனால் ஒரு சிறிய வெட்டுக்கிளி முட்டையானது பதினேழு வருடம் பூமியில் புதையுண்டு மரண நிலையில் இருந்து பதினெட்டாம் வருடம் சிறகுகள் முளைத்து மண்ணுக்கு மேல் உயிருடன் பறந்து வருவது இன்றும் நம் கண்முன்னே நடக்கும் காட்சியாக உள்ளது.

பனிரென்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் போல் 17 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே மண்ணறையிலிருந்து மேல் வரும் வெட்டுக்கிளிகள் உள்ளன. இவைகளின் உலக வாழ்வு ஐந்து வாரங்கள் மட்டுமே! அதற்குள் இனப்பெருக்கம் செய்து முட்டையிட்டு அதை மண்ணறையில் வைத்து தன் வாழ்வை முடித்து விடும். இந்த முட்டைகள் மீண்டும் வெட்டுக்கிளிகளாக வெளியுலகம் வருவதற்கு அடுத்த 13 அல்லது 17 வருடங்கள் மண்ணறை கப்ர்ஸ்தானிலேயே உறங்க வேண்டும். மரித்த மனிதர்கள் புதை குழியிலிருந்து வருவதற்கு உதாரணமாக அல்லாஹ் வெட்டுக்கிளியை உதாரணம் காட்டியதன் காரணம் இதுவாகவும் இருக்கலாம்.அல்லாஹ்வே அறிந்தவன்.

خُشَّعًا اَبْصَارُهُمْ يَخْرُجُوْنَ مِنَ الْاَجْدَاثِ كَاَنَّهُمْ جَرَادٌ مُّنْتَشِرٌۙ‏
(தாழ்ந்து பணிந்து) கீழ்நோக்கிய பார்வையுடன், அவர்கள்புதைகுழிகளிலிருந்துபரவிச்செல்லும்வெட்டுக்கிளிகளைப்போல்_வெளியேறுவார்கள்.
(அல்குர்ஆன் : 54:7)

“(எந்த உலக வாழ்க்கையின் போதையில் மயங்கி நம் சான்றுகள் குறித்து நீங்கள் அலட்சியமாக இருக்கின்றீர்களோ அந்த) உலக வாழ்க்கையின் உதாரணம் இதைப் போன்றதாகும்: நாம் வானத்திலிருந்து மழையை இறக்கினோம்; பின்னர் அதன் மூலம் மனிதர்களும் கால்நடைகளும் உண்ணக்கூடிய பூமியின் விளைபொருள்கள் நன்கு அடர்த்தியாக வளர்ந்தன; பூமி அழகாகவும், செழுமையாகவும் காட்சியளிக்க, அதன் பலனை அடைந்திட தாங்கள் ஆற்றல் பெற்றுள்ளோம் என அதன் உரிமையாளர்கள் எண்ணிக் கொண்டிருந்த அதே நேரத்தில் திடீரென இரவிலோ, பகலிலோ நம்முடைய கட்டளை வந்துவிட்டது! மேலும், நேற்று வரை எதுவும் அங்கு விளைந்திருக்காதது போல அதனை முற்றாக நாம் அழித்து விட்டோம்; சிந்தித்துணரும் மக்களுக்கு இவ்வாறு சான்றுகளை மிகத் தெளிவாக நாம் விளக்குகின்றோம்.
(அல்குர்ஆன் : 10:24)

நம் அனைவரையும் இறைவன் பாதுகாப்பானாக…

மனிதர்கள் இறைவனை மறந்து அநியாங்களை அதிகம் செய்யும் போது, இறைவன் எச்சரிக்கிறான். மனித சக்திக்கு மிஞ்சிய பலவற்றை செய்து காட்டி உணர்த்துகிறான். மனிதன் அதைக்கொண்டே உணர்ந்து தன்னை திருத்திக் கொண்டால் சரி. இல்லையேல் இறுதியில் ஒரே ஒரு பிடிதான். மனிதன் அழிக்கப்பட்டுவிடுவான்.
அப்படிப்பட்ட எச்சரிக்கைகள்தான் இவைகள்.
முதலில் கொரோனா.
அடுத்து புயல்மழை. பங்களாதேஷ் தவித்துக் கொண்டிருக்கிறது.
அடுத்து வெட்டுக்கிளி. இதோ பல நாடுகளை புரட்டிப்போட்டு வருகிறது.
இதிலும் திருந்தாவிட்டால் அடுத்த எச்சரிக்கைகள் தயாராக உள்ளன.
فَاَرْسَلْنَا عَلَيْهِمُ الطُّوْفَانَ وَالْجَـرَادَ وَالْقُمَّلَ وَالضَّفَادِعَ وَالدَّمَ اٰيٰتٍ مُّفَصَّلٰتٍ فَاسْتَكْبَرُوْا وَكَانُوْا قَوْمًا مُّجْرِمِيْنَ‏
இறுதியில் நாம் அவர்கள் மீது புயல் மழையை அனுப்பினோம்; மேலும், வெட்டுக்கிளியை ஏவினோம்; பேன்களைப் பரப்பினோம்; தவளைகளைப் பெருகச் செய்தோம்; இரத்தத்தைப் பொழியச் செய்தோம். இந்தச் சான்றுகள் அனைத்தையும் தனித்தனியே காண்பித்தோம். ஆயினும், அவர்கள் ஆணவம் கொண்டு நடந்தனர்; கொடூர குற்றவாளிகளாகவும் இருந்தனர்.
(அல்குர்ஆன் : 7:133)

விநோதமான வெட்டுக்கிளி

வெட்டுக்கிளி வலிமை மிக்க ஏழுவகைப் பிராணிகளின் உருவ அமைப்பில் உள்ளது.

  1. அதன் தலை குதிரையின் தலையாகும்.
  2. அதன் கழுத்து காளையின் கழுத்தாகும்.
  3. அதன் மார்பு சிங்கத்தின் மார்பாகும்.
  4. அதன் இறக்கை கழுகின் இறக்கையாகும்.
  5. அதன் கால்கள் ஒட்டகத்தின் கால்களாகும்.
  6. அதன் வால் பாம்பின் வாலாகும்.
  7. அதன் வயிறு தேளின் வயிராகும். (நூல்: தஹ்தீபுல் கமால்)

உலகில் பலநாடுகளில் விவசாயிகளிடம் வெட்டுக்கிளி என்று சொன்னால் ஒரே பயம்தான். ஒன்றல்ல, இரண்டல்ல, கோடிக்கணக்கில் வெட்டுக்கிளிகள் கூட்டாகப் படையெடுத்து வந்து பயிர்களை மட்டுமின்றிச் செடி, கொடி, மரம் என அனைத்தையும் தின்று தீர்த்து அப்படி ஒரு பொருள் இருந்ததற்குரிய அடையாளமே தெரியாமல் செய்துவிடும்.

வெட்டுக்கிளி படையெடுப்பு என்பது மிகவும் பயங்கரமானது. வட ஆப்பிரிக்காவின் மேற்குக் கோடியில் பாலைவனப் பகுதிகளில் தொடங்கி சீனாவின் வடபகுதி வரை பல நாடுகள் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் பாதிக்கக் கூடியவை. இந்த பட்டியலில் இந்தியாவின் ராஜஸ்தான், குஜராத், பஞாப், ஹரியானா ஆகிய மாநிலங்களும் அடங்கும்.

குர்ஆனில் வெட்டுக்கிளி

குர்ஆனில் “அல்ஜராது” என்று வெட்டுக்கிளியை அழைக்கப்படுகிறது. முஜாஹித் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறியதாவது; “ஃபிர்அவ்னுக்கும் அவனுடைய சமூகத்தாருக்கும் சோதனையாக அனுப்பப்பட்ட வெட்டுக்கிளிகள் அவர்களது வீட்டுக்கதவுகளில் அடிக்கப்பட்டுள்ள ஆணிகள் மற்றும் இரும்பாலான பொருட்களை சாப்பிட்டு விட்டு மரப்பலகைகளை விட்டுவிடும். (நூல்: தஃப்ஸீர் தபரி)

பொதுவாக வெட்டுக்கிளிகள் மரப்பலகைகளைப் போன்ற மிருதுவான பொருட்களைத்தான் தின்று தீர்க்கும். இது என்னவோ மிருதுவான பொருட்களை விட்டுவிட்டு கடினமான இரும்பை தின்று தீர்த்தது என்றால் இந்த வெட்டுக்கிளிகள் இறைவன் புறத்திலிருந்து வந்த சோதனையான வெட்டுக்கிளியாக இருப்பதால், இதே மாதிரி விநோத செயல்பாடுகளில் இறங்கியுள்ளது.

கிறிஸ்தவ விவிலியம் பழைய ஏற்பாட்டில் வெட்டுக்கிளி

பாலைவன வெட்டுக்கிளிகள் இது மாதிரி இருக்காது. ஆனால் ஃபிர்அவ்னின் சோதனைக்கு வந்த வெட்டுக்கிளிகள் பற்றி கிறிஸ்தவ விவிலியம் பழைய ஏற்பாட்டில் காணப்படுவதாவது, வெட்டுக்கிளிகள் எகிப்து தேசம் எங்கும் பரவி, எகிப்தின் எல்லை முழுவதும் இறங்கிற்று. அப்படிப்பட்ட வெட்டுக்கிளிகள் இதற்கு முன் இருந்ததும் இல்லை, அதற்குப் பின் இருந்ததும் இல்லை. அவை பூமியின் முகம் முழுவதையும் மூடிற்று. தேசம் அவற்றால் அந்தாகரப்பட்டது. கல்மழைக்கு தப்பி இருந்த நிலத்தின் பயிர் வகைகள் யாவும் மரங்களின் கனிகள் யாவையும் அவை பரீட்சித்துப்போட்டது. எகிப்து தேசமெங்குமுள்ள மரங்களிலும், வயல்வெளியான பயிர் வகைகளிலும் ஒரு பச்சிலையும் மீதியாய் இருக்கவில்லை. (யாத்திராகமம் 10,14,15)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ”வெட்டுக்கிளிகள் ஒரு தனிப்பட்ட உயிரினம் அல்ல; மாறாக அவை கடலில் உள்ள மீன் ஒன்றின் தும்மல் மூலம் உருவானவை” என்றார்கள்.

ஒரு மீன் தும்மல் போட்டு வெட்டுக்கிளியை வெளிப்படுத்தியதை நேரில் கண்ட ஒருவர் தமக்கு இந்த ஹதீஸை அறிவித்ததாக அறிவிப்பாளர் ஸியாத் பின் அப்தில்லாஹ் ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறினார்கள்.

இதை ஆய்வு செய்த ஒருவர் கூறியதாவது; ”கடலிலுள்ள மீன் இனங்களில் ஒன்று கடலோரத்தில் வந்து முட்டையிடும். பின்னர் அங்குள்ள தண்ணீர் வற்றிக் காய்ந்ததும், அந்த முட்டையில் சூரிய ஒளி படும். அந்த முட்டைகள் வெடித்து அவற்றிலிருந்து சிறகடிக்கும் வெட்டுக்கிளிக் குஞ்சுகள் வெளிவரும். (நூல்: திர்மிதி, இப்னுமாஜா)

வெட்டுக்கிளியை நாம் உண்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது!

நபித்தோழர் அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது; “நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஏழு போர்களில் கலந்து கொண்டோம். அப்போது நாங்கள் வெட்டுக்கிளிகளை உண்டோம். (நூல்: புகாரி, முஸ்லிம்)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; “தானாக செத்தவற்றில் இரண்டும், இரத்தங்களில் இரண்டும் நமக்கு உண்ண அனுமதிக்கப்பட்டுள்ளது. செத்தவற்றில் மீனும், வெட்டுக்கிளியும், இரத்தங்களில் கல்லீரலும், மண்ணீரலும் ஆகும். (அறிவிப்பாளர்: ஜாபி பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ, அபூதாவூத், தாரமி)

வெட்டுக்கிளிகளால் கிராமப்புறங்கள் மட்டுமே பாதிக்கப்படும் என்பதில்லை. ஒரு சமயம் சீனாவின் வட பகுதியில் ஹோ ஹாட் நகரை வெட்டுக்கிளிக் கூட்டம் தாக்கியது. சாலையில் சென்றவர்களின் முகத்தை வெட்டுக்கிளிகள் அப்பிக்கொண்டன். கார்கள் மீது வெட்டுக்கிளிகள் படை படையாக மோதின. பின்னர் இவற்றை லாரி லாரியாக அகற்ற வேண்டியிருந்தது.

இந்தியாவில் 1978 ஆன் ஆண்டிலும் பின்னர் 1993 ஆம் ஆண்டிலும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு நிகழ்ந்தது.

வெட்டுக்கிளிகளின் தாக்குதல் கடுமையாக இருக்கும்போது ஒரு சதுர மீட்டரில் 10,000 வெட்டுக்கிளிகள் வரை இருக்கும். சில சமயங்களில் இது பல நூறு சதுர மீட்டராகவும் இருக்கலாம். இந்த மாதிரியான வெட்டுக்கிளி கூட்டத்தில் 4 கோடி முதல் 8 கோடி வெட்டுக்கிளிகள் வரை இருக்கும். இவைகள் படையெடுத்து வரும்போது மிகப்பெரும் மேகக்கூட்டங்கள் நகர்ந்து பூமிக்கு வருவதுபோல் இருக்கும்.

ஃபிர்அவ்னுக்கு இறை சோதனையாக….

இதைவிட மிகப்பெரிய வெட்டுக்கிளி படையை ஃபிர் அவ்ன் தேசத்து எகிப்து மீது இறை சோதனையாக அனுப்பி வைத்ததாக அல்-குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

“அவர்கள் மூஸாவை நோக்கி, “நீங்கள் எங்களை வசப்படுத்துவதற்காக, எவ்வளவோ (அற்புதமான) சூனியத்தை நீங்கள் எங்கள் முன் செய்த போதிலும் நாங்கள் உங்களை நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்” என்று கூறிவிட்டார்கள். ஆகவே அவர்கள் மீது (மழையுடன் கூடிய) புயல் காற்று, வெட்டுக்கிளி, பேன், தவளை, இரத்தம் ஆகிய தெளிவான இவ்வத்தாட்சிகளை ஒன்றன்பின் ஒன்றாக நாம் அனுப்பி வைத்தோம். இதன் பின்னரும் அவர்கள் கர்வம் கொண்டு குற்றம் செய்யும் மக்களாகவே இருந்தார்கள். (அல்-குர்ஆன் 7:132,133)

வெட்டுக்கிளியை நீங்கள் கொன்றுவிடாதீர்கள், அது மிகப்பெரியவனான அல்லாஹ்வின் படை என்று ஒரு ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது. அவைகள் விவசாயப்பயிர்களுக்கு தீங்கு செய்யாமல் இருந்தாலதான் அவற்றை கொல்லக்கூடாது. அவைகளால் தீங்கு ஏற்படும் பட்சத்தில் கொல்ல அல்லது அப்புறப்படுத்துதல் செய்யலாம்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன்னிலையில் ஒரு வெட்டுக்கிளி வந்தது. அதனைப்பிடித்துப் பார்த்ததில் அதன் இறக்கைகளின் மீது அப்ரானி மொழியில், “நாங்கள் மிகப்பெரியவனான அல்லாஹ்வின் படை, எங்களுக்கு 99 முட்டைகள் இருக்கின்றன. எங்களுக்கு 100 முட்டைகள் பூர்த்தி அடைந்தால் நாங்கள் உலகையும் அதிலுள்ளதையும் தின்று தீர்த்துவிடுவோம்” என்று எழுதப்பட்டிருந்தது.

அப்பொழுது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “அல்லாஹ்வே வெட்டுக்கிளியை அழிப்பாயாக, அவற்றில் பெரியவைகளைக் கொன்று சிறியவைகளை மரணிக்கச் செய்வாயாக! அவற்றின் முட்டைகளை வீணாக்கி, அவற்றின் வாய்களை முஸ்லிம்களின் பயிர்களை விட்டுத் தடுப்பாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையை கேட்பவனாக இருக்கிறாய்” என்று பிரார்த்தித்தார்கள். பிறகு ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வந்து, “அந்தப் பிராத்தனையில் சில உமக்கு அங்கீகரிக்கப்பட்டது” என்று கூறினார்கள். (நூல்: தஃப்ஸீர் ஹமீத்)

ஷஅபீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறியதாவது; ஒருமுறை நீதிபதி ஷுரஹ் பின் அல்ஹாரிஸ் அவர்களிடம் வெட்டுக்கிளிகளின் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள்,

“அல்லாஹ் வெட்டுக்கிளிகளை இழிவாக்குவானக! அதில் வலிமை மிக்க ஏழுவகைப் பிராணிகளின் உருவ அமைப்பு உள்ளது.

  1. அதன் தலை குதிரையின் தலையாகும்.
  2. அதன் கழுத்து காளையின் கழுத்தாகும்.
  3. அதன் மார்பு சிங்கத்தின் மார்பாகும்.
  4. அதன் இறக்கை கழுகின் இறக்கையாகும்.
  5. அதன் கால்கள் ஒட்டகத்தின் கால்களாகும்.
  6. அதன் வால் பாம்பின் வாலாகும்.
  7. அதன் வயிறு தேளின் வயிராகும்” என்றார்கள். (நூல்: தஹ்தீபுல் கமால்)

நீங்கள் வெட்டுக்கிளியைப் பிடித்து நன்றாக கவனித்துப் பாருங்கள். மேற்கண்ட 7 பிராணிகளின் உருவ அமைப்பு தெரியவரும்.

“ரஹ்மத்” மாத இதழ், பிப்ரவரி 2017

Leave a comment